நவம்பர் 27
வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா வரலாற்றில் இந்த வாரம் மிகப்பெரிய சாதனை ஒன்றை திரைப்படங்கள் நிகழ்த்த உள்ளது. நவம்பர் 27ஆம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்து காத்திருக்கிறது. அன்றைய தினத்தில் மட்டும் மொத்தமாக 13 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரலாறு படைக்க உள்ளது. இந்த திரைப்படங்களின் வெளியீட்டின் மூலம் இந்த வருடம் மட்டும், தமிழ் சினிமாவில் இதுவரை 200 திரைப்படங்கள் வெளியாகி புதிய மைல் கல்லையும் அடைந்துள்ளது.
ஒரே நாளில் இவ்வளவு திரைப்படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் எந்த திரைப்படத்தை பார்ப்பது ? என்ற குழப்பத்திற்கும் ஆளாக நேரிடும். அது மட்டுமல்லாமல் சினிமா விமர்சகர்களும் விரைவாக இத்தனை திரைப்படங்களை விமர்சனம் செய்வதிலும் சிக்கல் ஏற்படும். இவற்றையெல்லாம் தாண்டி ஏராளமான திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் , எந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்குவது என்ற சிக்கல்களும் அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஏராளமான திரையரங்குகள் இருந்தாலும் , ஒரே நாளில் அதிகபட்சமாக 4 அல்லது 5 திரைப்படங்கள் வெளியானால் மட்டுமே ஓரளவிற்கு வெற்றினை ஈட்ட முடியும். 30 வருடங்களுக்கு முன் இருந்ததைப் போல தற்போது தமிழகத்தில் ஏராளமான திரையரங்குகள் இல்லை. அதுவும் அந்த காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை 100 நாட்கள் வரை பார்ப்பதற்கு ஏதுவாக குறைவான திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதன் காரணமாக திரைப்படங்கள் நீண்ட நாட்கள் ஓடி வசூலை தயாரிப்பாளருக்கு பெற்று தந்தது.
தற்போது ஒரே ஊரில் உள்ள சில தியேட்டர்களில் ஒரே திரைப்படமே வெளியிடப்பட்டு 4,5 நாட்களில் வசூலை குவித்து விட்டு , அடுத்த திரைப்படத்தை திரையிடுகின்றன. இது போன்ற காரணங்களினால் 3 திரைப்படத்திற்கு மேல் ஒரே நாளில் வெளியானால் பெரும்பாலும் அவை வெற்றி பெறுவதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. இந்த காரணங்களை முன்வைத்து தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த பேச்சு வார்த்தைகளில் சமரசம் ஏற்பட்டால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் திரையிடப்பட்டு, மீதமுள்ள திரைப்படங்கள் சில வாரங்கள் கழித்து திரையிடப்படலாம். மேலும் புதிய திரைப்படங்களின் வருகையினால் தற்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ராமாயணா- பாகம் 1' மற்றும் 'ஓம்' திரைப்படத்தின் வெற்றியினை அதிக அளவு பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியலில் கவனத்தை ஈர்க்கும் சிறிய பட்ஜெட் படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாக நடித்துள்ள 'மௌன மொழிகள்' திரைப்படம் அன்று வெளியாகிறது. பிக் பாஸ் புகழ் முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள 'நிறம்' திரைப்படமும், நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் டி. இமான் இசையமைத்துள்ள த்ரில்லர் படமான 'சிக்னல் அட் 11:30' திரைப்படமும் அன்று வெளியாகிறது.
மேலும் பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படமும் நவம்பர் 27 அன்றே வெளியாகிறது. இத்துடன் 606, சிட்டுக்குறிஞ்சி, கோ 2 கோ , ஜெடூசி , மதுர மோசடி ,மின்னும் ஓர் இரவு , நெல்லை பாய்ஸ் , பேய் பிடிச்சிருக்கு , வட மஞ்சுவிரட்டு ஆகிய திரைப்படங்களும் நவம்பர் 27 ரிலீசாகிறது.