📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 29, 2026 06:02 AM

அ.தி.மு.க.வில் சமூக வலைதள மோதல் உச்சம்: வேலுமணி ஆதரவாளர்கள் நீக்கம்

அ.தி.மு.க.வில் சமூக வலைதள மோதல் உச்சம்: வேலுமணி ஆதரவாளர்கள் நீக்கம்

கோவை: அ.தி.மு.க.,வில் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களின் சமூக வலைதள பதிவால், பொதுச்செயலர் பழனிசாமி கோபமானார். அதன் விளைவாக, 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு வரை பழனிசாமியின் வலதுகரமாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி இருந்தார். தேர்தலுக்கு பின், அவர்களிடையே முட்டல், மோதல் அதிகரித்தது. சட்டசபையில் த.வெ.க., அரசு கோரிய நம்பிக்கை ஓட்டெடுப்பில் வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர், த.வெ.க.,வை ஆதரித்தனர். அதனால், கோபமடைந்த பழனிசாமி, வேலுமணியிடம் இருந்த தலைமை நிலைய செயலர், மாவட்ட செயலர் பதவிகளை பறித்தார். அதற்கு பதிலாக, பழனிசாமி கொடுத்த துணை பொதுச்செயலர் பதவியை வேலுமணி ஏற்கவில்லை.

'அ.தி.மு.க.வின் இரண்டு கோடி பேர்களில் ஒருவர் தான் வேலுமணி' என, பழனிசாமி கூறினார். 'அந்த இரண்டு கோடி பேர் தேர்வு செய்து, பொதுச்செயலரானவர் நீங்கள்' என, வேலுமணி பதிலடி கொடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களில் பழனிசாமி - வேலுமணி ஆதரவாளர்கள் சண்டை தீவிரமானது. எம்.ஜிஆர்., - ஜெயலலிதா இணைந்து, வேலுமணியை அ.தி.மு.க.,வுக்கு தலைமை ஏற்க அழைப்பது போன்ற போட்டோவை, அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டனர்.

இதனால், வேலுமணியின் ஆதரவாளர்கள் 6 பேரை, கட்சியில் இருந்து நீக்கி, பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அ.தி.மு.க.,வின் கோவை புறநகர் மத்திய மாவட்டம், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலர் சபரி விக்ரம், குறிச்சி பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் சுரேஷ்குமார் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அவர்கள், பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நீக்கப்பட்ட நிர்வாகிகளை, வேலுமணி தன் கோவை இல்லத்திற்கு நேற்று வரவழைத்து ஆறுதல் கூறினார்.

வேலுமணி ஆதரவாளர்கள் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், வேலுமணியின் ஆதரவாளர்கள், 50க்கும் மேற்பட்டோரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இதில், 70 சதவீதம் பேர் வேலுமணியின் தொண்டாமுத்துார் தொகுதிக்கு உட்பட்டவர்கள்' என்றனர்.