📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 29, 2026 05:32 AM

சிங்கப்பூர் சட்டம்: 200 ஆண்டுகால ஆட்சி & நீதித்துறை

சிங்கப்பூர் சட்டம்: 200 ஆண்டுகால ஆட்சி & நீதித்துறை

நள்ளிரவுப்பொழுதில் எந்த அச்சமுமின்றித் தனியாக வீடு திரும்பும் சிங்கப்பூரரின் அந்த அமைதியான நடைதான், இந்த வாரம் நாம் கொண்டாடும் இருநூறு ஆண்டுகாலச் சட்டத்தின்படியான ஆட்சியின் உண்மையான வெற்றி.

1826ஆம் ஆண்டு இந்தத் தீவுக்கு வந்த இரண்டாவது நீதிச் சாசனம், வெறும் ஒரு காலனித்துவ ஆவணமாக வரவில்லை. அது ஒரு வாக்குறுதியாக வந்தது. சட்டத்துக்குமுன் அனைவரும் சமம் என்ற வாக்குறுதி.

அந்த வாக்குறுதியைத்தான் இருநூறு ஆண்டுகளாக இந்த நாடு காத்து வருகிறது. கடந்த சில நாள்களாக உலகளாவிய சட்டமுறை ஆட்சி மாநாடு தொடங்கி, வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற அமர்வுவரை சிங்கப்பூரில் ஒலித்த மூன்று குரல்களும் ஒரே உண்மையைத்தான் கூறின. ஆனால், மூன்றும் வெவ்வேறு இடத்திலிருந்து ஒலித்தன.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் நீதிமன்றத்தின் குரலில் பேசினார். நீதிமன்றம் அரசைக் கேள்வி கேட்கும், அரசு நீதிமன்றத்தை மதிக்கும். அதுதான் சட்டத்தின் ஆட்சி.

நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றும் தத்தமது வரம்பிற்குள் நின்று, பரஸ்பர மரியாதையுடன் செயல்படுவதே சிங்கப்பூர் அரசியலமைப்பின் வலிமை என்றார் அவர்.

அடுத்து அரசின் குரலில் பேசினார் மூத்த அமைச்சர் கா.சண்முகம். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து உடன்பாடு இல்லையென்று கருதினால் சட்டத்தைத் திருத்த வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்திலோ பொதுவெளியிலோ நீதித்துறையை விமர்சிக்கவோ தாக்கவோ கூடாது என்றார் அவர்.

நீதித்துறையின் சுதந்திரத்தையும் நேர்மையையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் என்று திரு சண்முகம் உறுதியாகச் சொன்னார்.

நிறைவாக மக்களின் குரலாக ஒலித்தார் சட்ட அமைச்சர் எட்வின் டோங். சட்டமுறை ஆட்சியே சட்ட அமைப்பின் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து வருவதை அவர் நினைவூட்டினார். நீதியானது மக்கள் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சட்டத்தின் ஆட்சி யாருக்காக என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது என்றும் அவர் சொன்னார்.

உலகம் போற்றும் நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஆனால், நம் வெற்றியை அதனை வைத்து மட்டும் அளக்க முடியாது. ஓர் எளிய மனிதன் தன் உரிமையைப் புரிந்துகொள்ள முடிகிறதா, உதவி கிடைக்கிறதா என்பதே உண்மையான அளவுகோல் என்று அவர் குறிப்பிட்டது ஒயாமல் ஒலிக்க வேண்டிய ஒப்பற்ற வாசகம்.

கோவில்களும் தேவாலயங்களும் பள்ளிவாசல்களும் அருகருகே அமைந்திருப்பதும், இன, சமய பேதமின்றி நாம் இணைந்து வாழ்வதும் தற்செயலாக நிகழ்ந்ததல்ல. வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களால் பாதுகாக்கப்பட்ட அரும்பொருள் என்பதையும் நாம் மனத்தில் பதிக்க அழைக்கப்படுகிறோம்.

இதன் அடிப்படையில் கொள்கைகளாக மட்டுமல்லாமல், செயல்களாகவும் களம்கண்ட நம்பிக்கைதான் இந்தச் சிறிய தீவை உலகம் நம்பும் நாடாக மாற்றியது.

அவ்வகையில், சட்டத்தின் ஆட்சி என்பது நமக்குத் தானாகக் கிடைத்த இலவசச் சொத்தன்று. மாறாக, ஒவ்வொரு தலைமுறையும் உறுதியாகக் கட்டியெழுப்ப வேண்டிய முக்கியப் பொறுப்பு என்பதை நினைவில்கொள்வோம்.

இருநூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்த நீதிக் கோட்டையை நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பதே ஒவ்வொரு சிங்கப்பூரரின் தலையாய கடமை.

அன்று சட்டம் ஓர் ஆவணமாக வந்தது. இன்று சட்டம் நம் நிம்மதியாக வாழ்கிறது. நாளை அதனைக் காப்பது நம் கையில்தான் இருக்கிறது. தொடரட்டும் நீதியின் மேன்மைமிகு பயணம், செழிக்கட்டும் மக்களின் நல்வாழ்வு!