📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 28, 2026 05:01 PM

விமானத்தில் மயங்கிய சிங்கப்பூர் இளையருக்கு மருத்துவர்கள் உதவி

விமானத்தில் மயங்கிய சிங்கப்பூர் இளையருக்கு மருத்துவர்கள் உதவி

சீனாவில் உள்நாட்டு விமானப் பயணத்தின் போது மயக்கமடைந்த சிங்கப்பூர் இளையருக்கு, அதே விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இரண்டு மருத்துவர்கள் உதவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 22ஆம் தேதி சீனாவின் குன்மிங் நகரிலிருந்து சியாமென் நகருக்குப் புறப்பட்டுச் சென்ற ‘சியாமென்ஏர்’ விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பதினேழு வயதான அந்த ஆணின் அடையாளம் குறித்த விவரங்கள் அந்தச் செய்தி அறிக்கையில் இடம்பெறவில்லை.

விமானப் பயணத்தின்போது பேச்சுமூச்சின்றிக் காணப்பட்ட அந்த இளையருக்கு உதவி தேவைப்படுவதாகவும், விமானத்தில் இருந்தவர்களிடம் உதவுமாறும் கோரி விமானப் பணியாளர்கள் விமானத்தின் ஒலிபெருக்கி வழியாக அறிவிப்பு வெளியிட்டனர்.

அப்போது, கல்விசார் மாநாடு ஒன்றில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த மருத்துவர்கள் கெ ஜியாங்குவோ (Ke Jianguo), ஹோங் ‌ஷிங்கி (Hong Qingqi) ஆகிய இருவரும் முன்வந்து உதவினர். அவர்கள் அந்த இளையரின் ரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பார்த்தபோது, அது எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும், அவரது வயிற்றுப் பகுதியில் வலி இருந்ததையும் அந்த இரண்டு மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அந்த இளையருக்கு முன்னர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்ததை மருத்துவர்கள் அறிந்து கொண்டதாகத் தெரிகிறது. அவருக்கு கடுமையான இரைப்பைக் குடல் அழற்சி ஏற்பட்டிருப்பதாகக் கண்டறிந்த அந்த மருத்துவர்கள், வாய்வழியாக உட்கொள்ளும் குளுக்கோஸ் உப்புக் கரைசலையும் இரைப்பைக் குடல் மருந்தையும் கொடுத்தனர்.

விமானம் சியாமென் நகரில் தரையிறங்கிய பிறகும் அந்த மருத்துவர்கள் சிறுவனைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தொடர்ந்து, அந்த இளையரின் இதயத் துடிப்பு இயல்பான அளவில் இருப்பதையும் அவரது ஒட்டுமொத்த உடல்நிலை நிலையாக இருப்பதையும் உறுதிசெய்த பிறகே அந்த மருத்துவர்கள் அங்கிருந்து விடைபெற்றுப் புறப்பட்டுச் சென்றனர்.