சிங்கப்பூர் மொழி: பிரதமர் வோங் எச்சரிக்கை
நம் ஆசிய அடையாளத்தையும் பண்புநலனையும் நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஒரே மொழி பேசும் சமுதாயமாகிவிடக் கூடாது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரின் மொழிச் சூழல் காலப்போக்கில் வெகுவாக மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இவ்வாண்டு தேசிய தினப் பேரணி மாண்டரின்மொழி உரையில் பிரதமர் அந்தக் கருத்துகளை முன்வைத்தார்.
பெரும்பாலான சீனக் குடும்பங்கள் வீட்டில் ஆங்கிலம் பேசுவது கருத்தாய்வொன்றில் தெரியவந்திருப்பதாக அவர் சொன்னார். இங்குள்ள சீனக் குடும்பங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே மாண்டரின் மொழியைப் பயன்படுத்துவதாகவும் அந்தக் கருத்தாய்வு குறிப்பிட்டிருந்தது.
‘கலாசார வேர்களிலிருந்து விலகிச்சென்று விடுவோம், இருமொழித் திறனை இழந்துவிடுவோம்’ என்ற அக்கறைகள் நிலவுகின்றன; அவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறிய பிரதமர், அரசாங்கம் அத்தகைய போக்குகளை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது என்றார்.
ஈராண்டுக்கு முன்னர், ஆங்கிலம், மாண்டரின் இருமொழித் திறனும் தேவை என்று தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டதைத் திரு வோங் நினைவுகூர்ந்தார். உயர் சீனமொழியைப் பயில்வதற்கான தகுதி அடிப்படைகளைத் தளர்த்தப்போவதாக அப்போது அவர் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு நடப்புக்கு வந்த அந்த நடைமுறையால் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்துள்ளதைப் பிரதமர் சுட்டினார். இன்று, உயர்நிலை ஒன்றில் உள்ள மாணவர்களில் கால்வாசிப் பேர் உயர் சீனமொழியைப் பயில்கின்றனர்.
மேலும் அதிகமான பள்ளிகள் இப்போது உயர் சீனமொழிப் பாடத்தை வழங்குகின்றன. பள்ளிகளைப் போலவே வீட்டின் மொழிச் சூழலும் முக்கியம் என்பதைத் திரு வோங் வலியுறுத்தினார். அந்தக் காலத்தில் ஒளிவழி 8ன் சீன நாடகங்களைக் குடும்பத்துடன் பார்த்ததையும் அவர் குறிப்பிட்டார். துணைவாசகங்கள் தம் பெற்றோருக்கு உதவியதையும் அவர் சுட்டினார். அவ்வாறே மாண்டரின் மொழித்திறனைத் தாம் படிப்படியாய் வளர்த்துக்கொண்டதாகப் பிரதமர் சொன்னார்.
இக்காலத்தில் பிள்ளைகள் மாண்டரின் கற்றுக்கொள்ளப் பெற்றோர் கூடுதல் முயற்சி எடுப்பதாகவும் அவர் கூறினார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் அலிசா வூவின் முயற்சி பற்றியும் பிரதமர் பேசினார். தொலைக்காட்சி நாடகங்களையும் மாண்டரின் பாடல்களையும் அலிசா அன்றாடம் கேட்டார். அதன்வழி அவருடைய மாண்டரின் மொழித்திறன் மேம்பட்டதோடு பிள்ளைகளும் அதனை விருப்பத்தோடு கற்றதாகத் திரு வோங் சொன்னார்.
மாண்டரின் மொழியை நன்றாகக் கற்கும் முயற்சிகளைக் குடும்பங்கள் மட்டும் தனித்துச் செய்ய முடியாது; அன்றாட வாழ்வில் அதற்கு ஆதரவான சமுதாயச் சூழலை அமைத்துக்கொடுப்பது முக்கியம் என்றார் பிரதமர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
உள்ளூர் ஊடகங்கள், கலாசாரக் குழுக்கள், கலைஞர்கள் அனைத்துத் தரப்பினருமே மாண்டரின் மொழியில் ஈர்க்கக்கூடிய படைப்புகளை உருவாக்குவதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர், சீனா இருநாடுகளின் தேசிய நூலகங்களும் இணைந்து ஆண்டின் பிற்பகுதியில் கூட்டாகக் கண்காட்சி ஒன்றை நடத்தவிருக்கின்றன. அதைக் காண அனைவரும் ஆவலுடன் இருப்பதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.
கலாசாரமும் கிளைமொழிகளும்
அண்மையில் ‘டியர் யூ’ திரைப்படம் பற்றிச் சிங்கப்பூரில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. நம் முன்னோடிகள் செய்த தியாகங்களையும் எதிர்கொண்ட சிரமங்களையும் பின்பற்றிய விழுமியங்களையும் அது நினைவுபடுத்தியதே அதற்குக் காரணம் என்று தாம் நம்புவதாகப் பிரதமர் கூறினார். தாம் அந்தத் திரைப்படத்தைக் கிளைமொழியில் பார்த்ததையும் அதில் உள்ள வசனம் மனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இருந்ததையும் அவர் சுட்டினார்.
கிளைமொழிகளைப் பலர் கலாசார மரபுடைமையாகப் பார்ப்பதாகவும் அதைப் பேணிக்காப்பது நல்லது என்று நம்புவதாகவும் திரு வோங் தெரிவித்தார். அதைத் தாம் ஒப்புக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
‘மாண்டரின் மொழியைப் பேசுங்கள்’ இயக்கத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மாண்டரின் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், கிளைமொழிகளுக்கும் கூடுதல் வாய்ப்பளிக்க முடியும் என்று பிரதமர் சொன்னார். இலவசத் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் பெரும்பாலும் மாண்டரின் மொழியிலேயே தொடரும் என்றும் கூறிய அவர், கட்டணத் தொலைக்காட்சிக்கும் திரைப்படங்களுக்குமான கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்றார்.
கிளைமொழித் திரைப்படங்களை வெளியிடுவதற்குத் தற்போது வரம்பு உள்ளது. அது இனி தளர்த்தப்படும். மாண்டரின் மொழியின் ஒலிவடிவம் இருக்குமென்றால், கிளைமொழித் திரைப்படங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்படமாட்டாது என்றார் திரு வோங்.
கட்டணத் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர்ச் சீனக் கலாசாரத்தை வலுப்படுத்துதல்
சீன முன்னோடிகளைப் பெருமைப்படுத்தும் விதமாகச் சிங்கப்பூர்ச் சீன மரபுடைமைக் கலைக்கூடம் நிறுவப்படும் என்று பிரதமர் கூறினார்.
அவர்கள் எவ்வாறு இங்கு வேரூன்றி வாழ்க்கையை அமைத்தனர் என்பதை அது எடுத்துக்காட்டும். பல்லினச் சமுதாயத்தை உருவாக்குவதற்கு உதவிய சீனச் சமூக அமைப்புகளுக்கும் கலைக்கூடம் புகழாரம் சூட்டும் என்றார் திரு வோங். சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் அமையவிருக்கும் அதனைச் சிங்கப்பூர்ச் சீனக் கலாசார நிலையம் நிர்வகிக்கும்.
தொடர்ந்து தனித்துவமான சிங்கப்பூர்ச் சீனக் கலாசாரத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் வளப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.