எதுக்கு சட்டமன்றத்தை நேரலையில் போடுறீங்கனு அழு அழுனு அழுறாங்க... அமைச்சர் கீர்த்தனா
சிவகாசியில் த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தின ராக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டு பேசியதாவது:-
தேர்தல் பிரசாரத்தின்போது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது இப்பகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தேன். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறேன். என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. அ.தி.மு.க.வினர் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எந்த வழியில் பொய் பிரசாரம் செய்தாலும் த.வெ.க. அதைப்பற்றி கவலைப்படாது. இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்.
உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். முதல்-அமைச்சர் விஜய்யின் மேஜையில் உள்ள 3 கோப்புகளை திறந்தால் யார் துபாய்க்கு சென்று தலைமறைவு ஆவார்கள் என தெரிய வரும். தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் விமர்சனங்கள், இப்போதும் விமர்சனங்கள். மக்களுக்குச் சேவையாற்ற விடக்கூடாது என எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். அதுதான் அவர்களின் வேலையே.
தொலைக்காட்சிகளில் நாடகங்கள் பார்த்த காலம்போய், இன்று சட்டசபை நேரலையைத்தான் பார்க்கின்றனர். சட்டசபையில் எதிர்க்கட்சிகள், மக்களுக்காக நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், மக்களும் அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் சட்டசபை நேரலை ஒளிபரப்பப்படுகிறது.
இதனிடையே, சட்டசபையை நேரலையில் ஒளிபரப்பக்கூடாது என சிலர் அழு அழுனு அழுறாங்க. சட்டசபையை நேரலையில் ஒளிபரப்புவோம் என 2021 தேர்தலில் வாக்குறுதியில் திமுக கூறியிருந்தது. ஆனால், இன்று வரையில் அவர்கள் அதனைச் செய்யவில்லை. சட்டசபையில் அவர்களின் முகத் திரையை நாம் காட்டுவது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் ஒட்டுமொத்த கட்சியையும் அழித்து விடுவோம் என அவர்கள் பயப்படுகின்றனர்.
அதே நேரம் பெண்ணாக இருந்தால் அரசியலுக்கு வரக்கூடாதா..? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா..? கோட் சூட் போடக்கூடாதா? என கேள்வி எழுப்பினார். மேலும் சாதாரண மக்கள் கோட் சூட் போட்டால் எதிர்க்கட்சிகள் புலம்பி தவிக்கிறார்கள் என்று விமர்சித்தார்.