DMK 2.0 .... அதிரடி ஆக்ஷக்கு தயரான ஸ்டாலின்!
DMK 2.0 .... அதிரடி ஆக்ஷக்கு தயரான ஸ்டாலின்!
திமுக மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கட்சியின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைப் பிடித்த மாநிலக் கட்சி, பல்வேறு சாதனைகளைப் படைத்த கட்சி என்ற பெருமை திமுகவுக்கு உள்ளது. அதற்குக் காரணம், தேங்கி நிற்காமல் காலத்திற்கு ஏற்ப நம்மை நாம் அப்டேட் செய்து, அப்கிரேட் செய்து கொள்வதுதான். ‘மாற்றங்கள் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்று கூறி, திமுக 2.0-வுக்கான பயணத்தை தற்போது தொடங்கியிருக்கிறோம்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக கள ஆய்வுக் குழுவை அனுப்பி, நிர்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டோம். ஆன்லைன் வாயிலாக தொண்டர்களிடமும் கருத்துகளைக் கேட்டோம். அதில் கிடைத்த அறிக்கைகளை முழுமையாகப் படித்தேன்.
அதன் அடிப்படையில் கட்சியின் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரைக்க, மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம். அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த 28-ஆம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம். அடுத்தகட்டப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்காக தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக உங்களை நியமித்துள்ளோம்.
கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள், என்னுடைய கண்களாகவும் காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும். எந்தவித பாகுபாடும் பார்க்காமல், எந்தவித அழுத்தத்திற்கும் அடிபணியாமல் உங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
நீங்கள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று, மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து, மறுசீரமைப்புக் குழு வகுத்துள்ள வழிமுறைகளின்படி கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
கிளை முதல் தலைமைக்கழகம் வரையிலான பொறுப்புகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது என்பதையும், அந்தத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும் என்பதையும் அனைவரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இதன் மூலம் புதிய நிர்வாகிகளும் இளைஞர்களும் கட்சிப் பொறுப்புகளுக்கு வருவார்கள். அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் இணைந்து பாடுபட்டு வளர்த்த கட்சியை அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்.
மேலும், செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு மற்றும் ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு உள்ளிட்ட காரணங்களால் சிலரின் தற்போதைய பொறுப்புகள் மாற்றப்படலாம். அதனால், தற்போதைய பொறுப்புகளில் இருந்து விலகும் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை. அவர்களின் தகுதிக்கேற்ற வகையில் வேறு பொறுப்புகள் வழங்கப்படும் என்பதையும் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கழக அமைப்புகள் பிரிக்கப்படுவதை உறுதி செய்து, அனைவரின் ஒப்புதலையும் பெற்று தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும் பணியை அடுத்த 15 நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகுதான் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க முடியும். அடித்தளம் வலிமையாக இருந்தால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும். வேர்கள் வலிமையாக இருந்தால்தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல நம்முடைய கழகக் கட்டமைப்புதான் நம்மைத் தாங்கி நிற்கிறது. அந்த ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும். கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம். இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாக நிலைத்து நிற்கும். கழகத்தை மறுசீரமைப்போம். மீண்டு வருவோம்; மீண்டும் வெல்வோம்!” இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எனவே திமுக மறுசீரமைப்பில் முழுமையாக இறங்கியுள்ளதால், இதனால் தவெகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதா? பொறுத்திருந்துப் பார்போம்.