📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 02, 2026 09:04 PM

கச்சத்தீவு விவகாரம்: திமுக

கச்சத்தீவு விவகாரம்: திமுக

கச்சத்தீவு விவகாரம்: திமுக-தவெக இடையே சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம்

கலைஞர் கருணாநிதியின் ஒப்புதலுடன் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியதால், தவெக-திமுக உறுப்பினர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

Published : September 2, 2026 at 7:41 PM IST

சென்னை: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக திமுக-தவெக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் எழுந்ததால், பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம், "தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் புத்தகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,291 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும், அவர்களில் 1,253 பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் திமுக அரசு என்பதை மறந்துவிடக்கூடாது" என்றார்.

அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், கச்சத்தீவை கொடுத்தது அவர்கள்தான் எனக் கூறி சிரித்தார். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "கச்சத்தீவு தொடர்பாக இந்தச் சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைய பேசப்பட்டுள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கச்சத்தீவு கொடுக்கப்பட்டது தவறு என்று பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம். கச்சத்தீவை மீட்க வேண்டும் என மத்திய அரசிடம் மீண்டும் மீண்டும் கேட்டோம். ஆனால், கச்சத்தீவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை" என்றார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "கச்சத்தீவை இந்திய அரசு கொடுத்தது என்பது உண்மைதான். ஆனால், அப்போது மாநில அரசு என்ன செய்தது? எதுவுமே செய்யாமல் தாரை வார்த்தது உண்மைதானே?" எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒன்றிய அரசு முடிவு எடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால், அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் இரண்டு முறை அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். கலைஞருடைய ஒப்புதலுடன்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. கலைஞர் நினைத்திருந்தால் அதைத் தடுத்திருக்க முடியும்.

உங்களுடைய அனைத்து வழக்குகளையும் காண்பித்து மிரட்டியதால், யாருக்கும் தெரியாமல் ஒப்புக்கொண்டீர்கள். மாநில அரசு நினைத்திருந்தால் கச்சத்தீவை தடுத்திருக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எ.வ.வேலு, "சட்டத்துறை அமைச்சர் முழுக்க முழுக்க தவறான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல்தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதிகாரம் இல்லாத விஷயத்தில் வலியுறுத்தலாம், தீர்மானம் போடலாம். ஆனால் ஒப்புதல் வழங்காமல் கொடுத்ததற்காக குற்றம்கூட சொல்லலாம். இதை மக்கள் மத்தியிலும், சட்டப்பேரவையிலும் எடுத்துக்கூறியுள்ளோம். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை" என்றார்

இதைத்தொடர்ந்து பேசிய தளவாய் சுந்தரம், "கச்சத்தீவு தொடர்பாக 2008-ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மாநில அரசையும், மத்திய அரசையும் வழக்கில் இணைத்தார். ஆனால், 2011 ஆம் ஆண்டு வரை மாநில அரசு எந்தக் கவுன்டரும் தாக்கல் செய்யவில்லை.

2011-ஆம் ஆண்டு மத்திய அரசு, கச்சத்தீவு இலங்கைக்குத்தான் சொந்தம் என நீதிமன்றத்தில் கவுன்டர் தாக்கல் செய்தது. அப்போது மத்தியிலும் கூட்டணி ஆட்சியில் திமுக இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் எந்த எதிர் மனுவையும் தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம் கச்சத்தீவு விவகாரத்தில் திமுக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது தெரியவருகிறது" எனக் குற்றம்சாட்டினார். இதனால் அவையில் மீண்டும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் மத்திய அரசு ஒருமுறை மட்டுமல்ல, குறைந்தது இருமுறை விரிவான ஆலோசனை நடத்தியது பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கச்சத்தீவு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதை கருணாநிதியே ஒப்புக்கொண்டுள்ளார்.

மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தப்பட்டிருந்தால், அது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை என்பதால் உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருந்தன. ஆனால், ஒப்பந்தம் முடிந்து இரு அவைகளையும் கூட்டாமல் கச்சத்தீவு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. கச்சத்தீவு கைமீறி சென்ற பிறகு தீர்மானம் நிறைவேற்றுவதால் என்ன பயன்? கச்சத்தீவு இந்தியாவிடம் இருந்தபோதே நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் நிறைவேற்றுவது ஏன்?" என்றும் அவர் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த கோவி செழியன், "எங்கள் உறுப்பினர் படகுப் பிரச்சனை குறித்துதான் பேசினார். ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் கச்சத்தீவு குறித்து பேசினார். விவாதம் சரியாகப் போய்க்கொண்டிருந்தபோது, அதை திசைதிருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சனையைப் பயன்படுத்துகிறீர்கள்.

நாங்கள் எதிர்வினையாற்றினால் அதை புகைப்படம் எடுத்து, நீங்கள் அமைதியாகப் பேசுவது போலவும், நாங்கள் கொந்தளிப்பது போலவும் ரீல்ஸ் விடுவதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சனையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள், காட்சிப்படுத்துவதற்காக அல்ல. எங்கள் பகுதியைக் காண்பிக்கும் அதே நேரத்தில், ஆளுங்கட்சிப் பகுதியையும் காண்பிக்க வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "எது சொன்னாலும் ரீல்ஸ் என்கிறார்கள். உண்மையையோ, வரலாற்றையோ, மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையோ சொன்னால் திமுகவுக்கு கோபம் வருகிறது" என்றார்.