தூய்மை பணியாளர்கள் போராட்டம்: உதயநிதி கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ஆளும் கட்சி தேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கியமான ஒரு வாக்குறுதி, தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு. இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றோடு சேர்த்து அவர்களுடைய போராட்டம் 15-வது நாளை எட்டியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக சட்டப்பேரவையில் இந்த பிரச்சனை தொடர்பாக அரசின் கவனத்திற்கு நாங்கள் எடுத்து வரும்போது, அமைச்சர்கள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும் என்று இந்த அவையில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இதுவரைக்கும் எந்த முடிவும், சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை.
இந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கக்கூடிய முதலமைச்சரை அவர்கள் நேரடியாகச் சந்தித்து கோரிக்கையை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய முதலமைச்சர் சென்ற ஆண்டு இதே மாதிரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பண்ணும்போது அவர்களுடைய கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவர்களை எல்லாம் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
எனவே என்னுடைய கோரிக்கை, நாங்கள் கேட்க விரும்புவது, அரசின் கவனத்திற்கு எடுத்து வருவது... தூய்மைப் பணியாளர்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றிக் கொடுப்பார்? தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து முதலமைச்சர் பேசுவாரா?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசும்போது எங்கள் ஆட்சியில் 100 நாட்களை தாண்டிப் போராட்டம் நடைபெற்றது என்று சொன்னார்கள்.
இப்போது நீங்களும் 100 நாட்களைத் தாண்டும் வரை காத்திருக்கப் போகிறீர்களா? அந்த கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன் .
அதேபோல, எங்களுடைய ஆட்சியில் போராட்டம் நடந்தபொழுது எங்களுடைய அப்போதைய அமைச்சர் சேகர்பாபு , மேயர் பிரியா அவர்களெல்லாம் தூய்மைப் பணியாளர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இப்போது ஆட்சியில் இருக்கும்போது ஒரு அமைச்சர் கூட அந்த போராட்டக்களத்திற்கு யாரும் சென்று அவர்களை இதுவரைக்கும் சந்திக்கவில்லை.
ஆட்சியில் இல்லாதபோது தூய்மைப் பணியாளர்களை சந்திக்க தயாராக இருந்த இன்றைய முதலமைச்சர் இப்போது தூய்மைப் பணியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்?
இவ்வாறு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்ததாவது :-
அவர்கள் கேட்கும் கோரிக்கை நிதி சார்ந்து உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில்
100 நாட்களை தாண்டி போராடினார்கள்.
இந்த ஆட்சியில் இரண்டு முறை அவர்களை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் அவர்கள் நடைபாதையில் அமர்ந்துதான் போராடினார்கள். ரிப்பன் மாளிகைக்கு உள்ளே கூட அனுமதிக்கவில்லை தற்போது ரிப்பன் மாளிகைக்கு உள்ளே அமர்ந்து தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்களது போராட்டத்திற்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.