ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000
லக்னோ: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கப்படும் என்றும் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் ஆறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், மூத்த தலைவர்கள் ஆசம் கான், சிவபால் யாதவ், டிம்பிள் யாதவ், ராஜேந்திர சவுத்ரி, நரேஷ் உத்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், “அரசியலமைப்பு தினமான இன்று நாம் நமது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறோம். ஏனென்றால், பாஜக கூறிய நல்ல காலம் இதுவரை வரவில்லை. ஆனால், கெட்ட காலம் முடிவுக்கு வரப்போகிறது. ஆட்சியில் இருந்து அகற்றப்படப் போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அவர்களின் பேச்சும் மாறியிருக்கிறது.
ஆதிக்கம் செலுத்தும், மேலாதிக்க மனப்பான்மை கொண்ட, சுயநலமிக்க சிலர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தாங்கள் அனுபவித்து வரும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றனர். இந்த முயற்சியில் அவர்கள் அரசியலமைப்பைத் திருத்த மட்டுமல்ல, அழிக்கவும் நினைக்கின்றனர். அரசியலமைப்பை நேசிக்கும் நாம், இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதை நமது தேசிய மற்றும் சமூகக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
நமது நாடு அரசியலமைப்பு மூலமாக ஆளப்பட வேண்டுமே தவிர, சர்வாதிகாரம் மூலம் அல்ல. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோருக்காக சமாஜ்வாதி கட்சி இருக்கிறது. அரசியலமைப்பு வழங்கும் சமூக நீதியை நிலைநாட்ட இது விரும்புகிறது. நாம் அனைத்து வேறுபாடுகளையும் ஒழித்து, இட ஒதுக்கீட்டையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்துவோம்” என தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.5,000 வழங்கப்படும், வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கப்படும், 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் மாணவிகளுக்கு மிதிவண்டி மற்றும் சூரிய ஆற்றலில் இயங்கும் விளக்குகள் வழங்கப்படும், நிரந்தர பணி நியமனம் பெற முடியாத அக்னிவீரர்களுக்கு மாநில காவல்துறை மற்றும் பிற துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும், 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்’ என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.