கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி கனிமொழி சோமு மனு தாக்கல்
சென்னை: 116 நாட்களாக தமிழக அரசு மவுனம் காத்ததால் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான ஆபாச குறுஞ்செய்தி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்பி கனிமொழி சோமு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக திமுக முன்னாள் எம்பியும், மாநில மருத்துவர் அணி செயலாளருமான கனிமொழி என்.வி.என்.சோமு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் அந்த தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் கடந்த ஜூலை 31-ம் தேதியே தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அப்போதே எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காமல், ஆளுங்கட்சித் தலைமை அமைதி காத்துள்ளது. கடந்த நவ.9-ம் தேதியன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி இந்த பிரச்னையை பொது வெளியில் பேசிய பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது.
நவ.12 அன்றே இதுதொடர்பாக திமுக சார்பில் தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. அப்போதே சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றவும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பாதுகாக்கவும் கோரியிருந்தோம். ஆனால் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் கடந்த நவ.15 அன்று தாமாக முன்வந்து இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தி, ஆதாரங்களைப் பாதுகாக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் த்ரிசூலி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி புகார் அளிக்காதது குறித்து உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்பிறகு நவ.23 அன்று அந்த அதிகாரி அளித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸார் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங்கையும், விசாரணையை கண்காணிக்க நிர்வாக ஐஜி காமினியையும் நியமித்தும், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்றும், சமூக வலைதளத்தில் இந்த விவகாரம் தொடர்பான பதிவுகளை நீக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 31-ம் தேதி முதல் நவ.24-ம் தேதி வரை 116 நாட்களாக இந்த விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் மவுனம் காத்தது ஏன் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
பெண் ஐஏஎஸ் அதிகாரியின் புகார் தொடர்பாக தலைமைச் செயலாளர், உள்துறை, முதல்வர் அலுவலகம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் அனைவருக்கும் முன்கூட்டியே தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் விசாரிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்று செல்லும்படி தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியதாக ஊடகச் செய்திகள் வாயிலாகவும், மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான கவிதா ராமுவின் சமூகவலைதளப் பதிவு மூலமாகவும் தெரியவந்துள்ளதால் அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டுகளை மறுத்தும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அந்த எம்எல்ஏ அப்பாவி எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். இதுபோல ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எம்எல்ஏ-வுக்கு ஆதரவாக பேசியிருப்பதால் இந்த விசாரணை நியாயமாக நடைபெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விவகாரத்தில் அனைத்து தகவல் பரிமாற்றமும் மின்னணு முறையில் நடந்துள்ள நிலையில், இந்த வழக்கில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் சேர்க்கப்படாதது, இந்த வழக்கை ஒரு சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக போலீஸாரால் இந்த வழக்கை நியாயமாக விசாரிக்க முடியாது. சிங்கப்பெண் அதிரடிப்படையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மாநில அரசு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை பாதுகாக்கிறது.
மேலும் கள்ளக்குறிச்சி பெண் அதிகாரியின் புகார் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகே சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே, ஒரு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், முதல்வர் அலுவலக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்.
அத்துடன் வாட்ஸ்ஆப் உரையாடல்கள், செல்போன்கள், அழைப்பு விவரங்கள், சிசிடிவி காட்சிகள், வருகைப் பதிவேடுகள், அரசு அலுவலகத் தகவல் தொடர்பு ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய மின்னணு ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.