அநியாயங்களை தட்டிக் கேட்கும் குரலாக உதயநிதி இருக்கிறார்
அநியாயங்களை தட்டிக் கேட்கும் குரலாக உதயநிதி இருக்கிறார் – தங்கம் தென்னரசு
"தமிழக மக்களும், ஒட்டுமொத்த திமுகவினரும் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறார்கள். கட்சியினர் அவரது வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும்" என்று தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தார்.
Published : November 26, 2026 at 4:36 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் குரலாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் எழுதிய ‘உதயநிதி வாராரு’ என்ற பாடல் வெளியீட்டு விழா, திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பாடலை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். தொடர்ந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
இதனை அடுத்து, நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட இயக்கத்தின் போர்வாளாக உதயநிதி ஸ்டாலின் திகழ்ந்து வருவதாகவும், தமிழகத்தில் நடைபெறும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் மாபெரும் குரலாக தெற்கில் இருந்து உதயநிதி ஸ்டாலினின் குரல் ஒலிப்பதாகவும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் பேசும் கருத்துகளை தமிழகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகமும் உற்று நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் முன் வைக்கும் விவாதங்கள், அவரது உரையில் வெளிப்படும் நகைச்சுவை மற்றும் ஆழமான கருத்துகள் கவனிக்கத்தக்கவை என்று கூறிய அவர், இளைஞரணி பொறுப்பு வழங்கப்பட்ட நாள் முதல், திட்டமிட்டு இளைஞரணியை செதுக்கி, அனைவரையும் களத்தில் செயல்படக் கூடிய வகையில் உருவாக்கி இருக்கிறார் என்றும் அவர் பாராட்டினார்.
மேலும் 1998-ஆம் ஆண்டு, தாம் அரசியலில் நேரடியாக நுழைந்த போது, சட்டப் பேரவையில் அடியெடுத்து வைத்த சில மாதங்களிலேயே இளைஞரணி பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் பங்கேற்றதாகவும், தற்போது அதே போன்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் குறித்த பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக மக்களும், ஒட்டு மொத்த திமுகவினரும் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலை எதிர்பார்ப்பதாகவும், கட்சியினர் அவரது வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டார்.