தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பு
சென்னை: தவெக தலைமையிலான தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் மீது அரசுக்கு ஆதரவு அளித்துவரும் இடதுசாரிக் கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதன் காரணமாக, தமிழக அரசியல் களத்தில் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளரைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இளையர்களும் மாணவர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் இத்தகைய போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்குமாறு வட்டாட்சியர் உத்தரவிட்ட சம்பவம் பெரும் புயலைக் கிளப்பியது.
கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்தச் சுற்றறிக்கையை அரசுத்தரப்பு திரும்பப் பெற்றாலும் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு அடங்கியபாடில்லை.
தலைமைச் செயலாளரின் ஒப்புதல் இன்றி இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியாது என்று இடதுசாரிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு வழங்கப்பட்ட ஆறு மாதப் பதவி நீட்டிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்தப் போகிறீர்களா அல்லது இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா என்பதை முதல்வர் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்,” என கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் காட்டிலும் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாக தவெகவின் கூட்டணிக் கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.
திண்டுக்கல் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்றித் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளார் என்றும் அவர் மீது துறைரீதியான அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
எனினும், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய், நேரடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.