📅 Tuesday, 24 November 2026 IST | கார்த்திகை 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 24, 2026 06:31 PM

IND vs NZ: சுப்மன் கில் பேச்சை நம்ப முடியவில்லை.. எப்படி அவர் இப்படி செய்யலாம்

IND vs NZ: சுப்மன் கில் பேச்சை நம்ப முடியவில்லை.. எப்படி அவர் இப்படி செய்யலாம்

IND vs NZ: சுப்மன் கில் பேச்சை நம்ப முடியவில்லை.. எப்படி அவர் இப்படி செய்யலாம்- இங்கி. வீரர் தாக்கு

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெற்றி பெற 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், இந்திய கேப்டன் சுப்மன் கில் போட்டியைக் கைவிட்டு டிராவிற்கு சம்மதித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெலிங்டனின் நடந்த இப்போட்டியின் கடைசி நாளில், நியூசிலாந்து கேப்டன் டாம் லேதமிடம் கை குலுக்கி போட்டியை டிரா செய்ய கில் ஒப்புக்கொண்டார்.

போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் தன் முடிவைக் குறித்து பேசிய சுப்மன் கில், "ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. மேலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சோர்வடைந்திருந்தனர். அவர்கள் அனைவருமே போட்டியில் கிட்டத்தட்ட 50 ஓவர்கள் வரை பந்துவீசியுள்ளனர்.

அடுத்த போட்டி இன்னும் மூன்று நாட்களில் தொடங்கவுள்ள நிலையிலும், நாளை பயணம் செய்ய வேண்டியிருப்பதாலும் பந்துவீச்சாளர்களின் புத்துணர்ச்சியைக் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது. மேலும் கூடுதலாக 5 முதல் 10 ஓவர்கள் வீசியிருந்தாலும் அதில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று விளக்கமளித்தார்.

கில்லின் இந்த விளக்கத்தைக் கண்டு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கடும் அதிர்ச்சியடைந்தார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், "இது நம்பமுடியாததாக இருக்கிறது... போட்டி முடிந்த கடைசி ஒரு மணி நேரத்தில் இதுவரை 5 விக்கெட்டுகள் வீழ்ந்ததே இல்லையா என்ன?" என்று கில்லின் முடிவைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ஹென்றி நிக்கோல்ஸின் ஆட்டமிழக்காத 175 ரன்கள் மற்றும் கிளென் பிலிப்ஸின் 118 ரன்கள் உதவியுடன் 368 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 720 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இது நியூசிலாந்து மண்ணில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகும். இதன் மூலம் இந்திய அணி 352 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணி, கடைசி நாள் தொடக்கத்தில் 119/2 என்ற நிலையில் இருந்தது. டெவோன் கான்வே 65 ரன்களுடனும்,ரச்சின் ரவீந்திரா 37 ரன்களுடனும் மற்றும் டாம் பிளண்டல் 15 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டாரில் மிட்செல் 186 பந்துகளில் 49 ரன்கள் மற்றும் கிளென் பிலிப்ஸ் 126 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து, 43 ஓவர்கள் நிலைத்து நின்று 63 ரன்கள் சேர்த்தனர். ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி டிராவில் முடிந்தது. நியூசிலாந்து இன்னும் 113 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இந்திய அணிக்கு இதுபோன்று டிரா செய்வது முதன்முறையல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு மைதானத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா இதே போன்ற சூழலைச் சந்தித்தது. அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 503/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இந்தியா, இலங்கையை 290 ரன்களுக்கு சுருட்டி ஃபாலோ-ஆன் வழங்கி மீண்டும் பேட்டிங் செய்ய வைத்தது. ஆனால், இலங்கையின் சோனல் தினுஷா 264 பந்துகளில் 133* ரன்கள் குவித்து நிலைத்து நின்றார். இலங்கை அணி 429/9 என்ற நிலையை எட்டியபோது, வெற்றிக்கு 1 விக்கெட் மட்டுமே தேவைப்பட்ட சூழலில் 2-0 என்ற தொடர் வெற்றியைத் தவறவிட்டு போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்த டிராவால் இந்திய அணிக்கு பெரும் புள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்போட்டியில் கிடைக்க வேண்டிய 12 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் 4 புள்ளிகளை மட்டுமே இந்தியா பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றி சதவீதம் 51.52%-லிருந்து 50.00%-ஆகக் குறைந்துள்ளது. தற்போது 12 போட்டிகளில் 72 புள்ளிகளுடன் இந்தியா 4-வது இடத்தில் நீடிக்கிறது.