வைபவ் சூர்யவன்ஷி 28 சிக்சர்கள் விளாசி உலக சாதனை.. கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத ரெக்கார்ட்
வைபவ் சூர்யவன்ஷி 28 சிக்சர்கள் விளாசி உலக சாதனை.. கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத ரெக்கார்ட்
தோஹா: தொழில்முறை கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் என அனைத்து வித கிரிக்கெட் போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசி வைபவ் சூரியவன்ஷி புதிய உலக சாதனை படைத்துள்ளார். ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைத் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணியின் தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூரியவன்ஷி 28 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பு 2018-இல் ஆஸ்திரேலிய வீரர் டார்சி ஷார்ட் விளாசிய 23 சிக்ஸர்களே உலக சாதனையாக இருந்தது. 15 வயது இடதுகை பேட்டரான வைபவ் சூரியவன்ஷி 53 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 28 சிக்ஸர்களுடன் 204 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் மிகவேகமாக 100, 150 மற்றும் 200 ரன்களைக் கடந்த பேட்டர் என்ற சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் எந்தவொரு இந்திய பேட்டரும் கிரிக்கெட்டில் 20 சிக்ஸர்களுக்கு மேல் அடித்ததில்லை. மேலும் எந்தவொரு அணியும் ஒரு போட்டியில் 27 சிக்ஸர்களுக்கு மேல் விளாசியதில்லை. வைபவ் சூரியவன்ஷி ஒரே இன்னிங்ஸில் இந்த இரண்டு சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
லிஸ்ட்-ஏ கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்டர்களின் பட்டியலில் 28 சிக்ஸர்களுடன் வைபவ் சூரியவன்ஷி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் டார்சி ஷார்ட் 23 சிக்ஸர்களுடனும், பெவோன் ஜேக்கப்ஸ் 21 சிக்ஸர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். நமீபியாவின் கெர்ஹார்ட் ஸ்னைமேன் மற்றும் இங்கிலாந்தின் இயன் மோர்கன் ஆகியோர் தலா 17 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர்.
மேலும், இந்தியாவின் ரோஹித் சர்மா , தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில், பங்களாதேஷின் சௌமியா சர்க்கார், அமெரிக்காவின் ஜஸ்கரன் மல்ஹோத்ரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஒரு இன்னிங்ஸில் தலா 16 சிக்ஸர்கள் விளாசி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அசத்தலான இன்னிங்ஸ் மூலம் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கான தனது ஆதிக்கத்தை வைபவ் சூரியவன்ஷி செலுத்தியுள்ளார். தற்போது டி20 ஆட்டக்காரராகப் பார்க்கப்படும் அவர், 50 ஓவர் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இதுபோன்று சிறப்பாகச் செயல்பட்டால் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கதவுகள் அவருக்கு விரைவில் திறக்கக்கூடும்.