📅 Tuesday, 24 November 2026 IST | கார்த்திகை 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 24, 2026 06:31 PM

டிரா செய்வதில் இந்தியாவுக்கு ஒரு நியாயம்.. இங்கிலாந்துக்கு வேற நியாயமா? பென் ஸ்டோக்ஸ் ரியாக்ஷன்

டிரா செய்வதில் இந்தியாவுக்கு ஒரு நியாயம்.. இங்கிலாந்துக்கு வேற நியாயமா? பென் ஸ்டோக்ஸ் ரியாக்ஷன்

டிரா செய்வதில் இந்தியாவுக்கு ஒரு நியாயம்.. இங்கிலாந்துக்கு வேற நியாயமா? பென் ஸ்டோக்ஸ் ரியாக்ஷன்

வெலிங்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டம் முடிய இன்னும் 15 ஓவர்கள் மீதமிருந்தபோதே கேப்டன் சுப்மன் கில் போட்டியை டிரா செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், சுப்மன் கில்லின் இந்த முடிவையும் அவரது விளக்கத்தையும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சமூக வலைதளத்தில் கிண்டல் அடித்துள்ளார். எந்த வாசகமும் இன்றி அவர் பகிர்ந்த ஒரு ரியாக்ஷன் வீடியோ, சுப்மன் கில்லின் இரட்டை நிலைப்பாட்டை கேள்வி கேட்பதாக உள்ளது.

வெலிங்டன் டெஸ்டின் கடைசி நாளில் நியூசிலாந்து அணி 120 ஓவர்களில் 239 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே 113 ரன்கள் பின்தங்கியிருந்தது. இன்னும் 15 ஓவர்கள் வீசப்பட வேண்டிய சூழலில், வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையிலேயே சுப்மன் கில் டிராவை ஏற்றுக்கொண்டு அம்பயர்களிடம் கைகுலுக்கினார்.

இது பற்றி போட்டிக்குப் பின் பேசிய கில், "எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் 50 ஓவர்கள் வரை வீசியுள்ளனர். அடுத்த 3 நாட்களில் கிறைஸ்ட்சர்ச்சில் அடுத்த டெஸ்ட் துவங்குகிறது. எனவே பந்துவீச்சாளர்களை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்தோம். கூடுதலாக 5 அல்லது 10 ஓவர்கள் வீசுவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை" என்று நியாயப்படுத்தினார். கில்லின் இந்த விளக்கத்தைப் பார்த்துதான் பென் ஸ்டோக்ஸ் ஆச்சரியப்பட்டு நக்கலாக ரியாக்ட் செய்துள்ளார். இதற்குப் பின்னால் ஒரு பெரிய வரலாற்று சம்பவம் உள்ளது.

கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் மோதின. அந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் ஆட்டம் டிராவை நோக்கி சென்றபோது, சுமார் 15 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய வீரர்களுக்கு கைகுலுக்கி டிராவை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்.

ஆனால் அப்போது களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருமே 80 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் பென் ஸ்டோக்ஸ் டிரா செய்ய முன் வந்ததை ஏற்க மறுத்த இந்திய பேட்டர்கள், டிராவை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சோர்வடைந்திருந்த நிலையிலும், தங்களது தனிநபர் சதத்தை எட்டுவதற்காக கடைசி வரை விளையாடி சதம் அடித்த பிறகே ஆட்டத்தை முடித்தனர்.

அன்று இங்கிலாந்து அணி 15 ஓவர்களுக்கு முன்பே டிரா செய்ய அழைத்தபோது, அதை ஏற்காமல் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, இன்று தனது பந்துவீச்சாளர்கள் சோர்வடைந்துவிட்டார்கள் என்ற காரணத்தைக் கூறி 15 ஓவர்களுக்கு முன்பே போட்டியை டிரா செய்ததை பென் ஸ்டோக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது பென் ஸ்டோக்ஸ்-உம் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சோர்ந்து விட்டார்கள் என்ற காரணத்தை தான் முன் வைத்தார்.

இங்கிலாந்துக்கு என்றால் ஒரு நியாயம், இந்தியாவுக்கு என்றால் வேறு ஒரு நியாயமா என்று கேள்வி எழுப்பும் வகையில் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்டுள்ள இந்த பதிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பரவி வருகிறது.