📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 26, 2026 07:04 PM

குடும்பங்களுக்குப் புதிய சேவைத் திட்டம்: சிங்கப்பூர்

குடும்பங்களுக்குப் புதிய சேவைத் திட்டம்: சிங்கப்பூர்

திருமணப் பூசல், குடும்ப வன்முறை, பிள்ளைகளின் நடத்தைச் சிக்கல்கள் போன்ற பல பிரச்சினைகளுக்கு உதவி நாடும் குடும்பங்களுக்கு 2029ஆம் ஆண்டு முதல் எளிமையான நடைமுறை அறிமுகமாகிறது.

‘ஒரு குடும்பச் சேவை’ (One Family Service) எனும் புதிய முறையின்கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முதன்மைப் பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். இதனால் குடும்பங்கள் பல்வேறு அமைப்புகளிடம் சென்று தங்களது துயரங்களை மீண்டும் மீண்டும் விவரிக்க வேண்டியிருக்காது.

தற்போதுள்ள குடும்ப ஆதரவு, பாதுகாப்பு, இளையர் சேவைகள் சார்ந்த ஒன்பது திட்டங்களை இந்தப் புதிய முறை ஒன்றிணைக்கும். இத்திட்டங்கள் ஆண்டுதோறும் ஏறக்குறைய 35,000 தனிநபர்கள் அல்லது குடும்பங்களுக்கு உதவுகின்றன. ஐந்தில் ஒரு குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களின் ஆதரவைப் பெறுகிறது.

2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்ட குடும்பச் சேவைகள் மறு ஆய்வுக் குழு இதனைப் பரிந்துரைத்தது. குழுவின் 19 பரிந்துரைகளையும் அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளது.

லேக்சைட் குடும்பச் சேவை நிலையத் தலைவர் சாரா சோ கூறுகையில், பல்வேறு வல்லுநர்களிடம் வேதனையான அனுபவங்களைத் திரும்பத் திரும்பக் கூறுவது மனச்சோர்வைத் தரும் என்றார். பல சந்திப்புகளால் வேலை விடுப்பு, பிள்ளைப் பராமரிப்பு, போக்குவரத்துச் செலவு போன்ற சுமைகளும் ஏற்படுகின்றன.

பெற்றோருக்கு இடையிலான வன்முறை, 15 வயது மகனின் தாக்குதல், 13 வயது மகன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது போன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஒரு தாய், பல வல்லுநர்களிடம் தன் துயரத்தை மீண்டும் மீண்டும் கூற நேரிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய முறையில் ஒரே பொறுப்பாளர் அனைத்து வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த திட்டத்தை வழிநடத்துவார். இதனால் குடும்பங்களின் சுமை வெகுவாகக் குறையும் என்று அவர் விவரித்தார்.