📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 27, 2026 08:01 AM

நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்...உயிரிழப்பு 157 ஆக உயர்வு!

நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்...உயிரிழப்பு 157 ஆக உயர்வு!

நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்...உயிரிழப்பு 157 ஆக உயர்வு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கி.மீ. வடக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதியில் லெண்டே கோலா ஆறும், பிற சிறிய ஆறுகளும் ஒன்றிணைந்து போடேகோஷி ஆறாக கீழ்நோக்கிப் பாய்கின்றன.

இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகிலுள்ள ரசுவா மற்றும் நுவாக்கோட் மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆற்றின் இருபுறங்களிலும் இருந்த வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து 93 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட 93 பேரில் 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 400-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை வெள்ளத்துக்குப் பிறகு தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 341 பேர் வெளிநாட்டினரும், 28 பேர் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்.

காணாமல் போன இந்தியர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேரும் உள்ளனர். இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 37 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

காணாமல் போன வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, நெதர்லாந்து, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.

நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை அமைத்துள்ளது. இந்தியாவில் இருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளில் இருந்து +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மூலமும் தொடர்புகொள்ளலாம். மேலும், +91 80 6900 9901 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் உதவி பெறலாம். தமிழக அரசின் உதவி மையத்தின் வாட்ஸ்அப் எண் 9289516712 ஆகும்.

இதேபோல், நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்கள் தொடர்பான உதவி மற்றும் தகவல்களுக்கு +977 985 131 6807 மற்றும் +977 970 910 7500 ஆகிய அவசரகால எண்களைத் தொடர்புகொள்ளலாம் என நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பேரிடரைத் தொடர்ந்து தேசம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். “தயவுசெய்து பொறுமையாக இருங்கள். உங்களுடைய மீட்பு, சிகிச்சை, உணவு மற்றும் புகலிடத்துக்கு அரசு முழுப் பொறுப்பேற்கிறது. இதுபோன்ற பேரிடர் தருணத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு இந்தியா மற்றும் சீனாவிடம் நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 14 மாதங்களில் இரண்டு முறை லெண்டே கோலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை நேபாள பகுதியில் பனிப்பாறை உடைந்ததுடன், பனிச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் போக்கு தடைப்பட்டு, அதன்பின்னர் திடீரென கீழ்நோக்கி பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டதாக பேரிடர் ஆபத்து குறைப்புக்கான நிபுணர் சன்யால் தெரிவித்துள்ளார்.