📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business November 28, 2026 08:30 AM

ரூ.11 லட்சம் அலங்கார விளக்கு, ரூ.30 லட்சம் டிவிக்கள்! அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஆடம்பரம் அம்பலம்

ரூ.11 லட்சம் அலங்கார விளக்கு, ரூ.30 லட்சம் டிவிக்கள்! அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஆடம்பரம் அம்பலம்

புதுடில்லி: டில்லி முதல்வராக இருந்தபோது, 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலங்கார விளக்குகள், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'டிவி'க்கள் உட்பட பல்வேறு ஆடம்பர பொருட்களுடன் கூடிய அரசு பங்களாவில் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்தது அம்பலமாகியுள்ளது.

கடந்த 2015 முதல் 2024 வரை டில்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்தார். பதவியில் இருந்தபோது, எண் 6, பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள அரசு பங்களாவில் அவர் வசித்து வந்தார். கடந்த 2020 முதல் 2022ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்த வீடு சீரமைக்கப்பட்டது. எளிமையாக வாழ்வதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், 'சீஷ் மஹால்' எனப்படும், கண்ணாடி மாளிகை என்ற ஆடம்பர பங்களாவை கட்டியதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது.

கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,விடம் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியதை அடுத்து, அரசு பங்களாவை கெஜ்ரிவால் காலி செய்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தும் வகையில், ஆடம்பரமாக கட்டப்பட்ட அந்த பங்களாவை செய்தியாளர்களின் பார்வைக்காக ஆளும் பா.ஜ., அரசு நேற்று திறந்து வைத்தது.

எட்டு படுக்கையறைகள், 12 குளியலறைகள், 6.71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூஜை அறை அமைப்பு, இரண்டு மாஸ்டர் படுக்கையறைகள், விருந்தினர்கள் படுக்கையறைகள் மற்றும் ஏராளமான அறைகளை கொண்ட அந்த பங்களாவில் 11.56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. முக்கிய அறைகளில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து உயர்தர 'டிவி'க்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், 5.47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருவர் அமரும் சோபா, 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு கதவுகள் கொண்ட குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்டவையும் இருந்தன. கழிவறைகளில் நீர் மற்றும் காற்றை அழுத்தத்துடன் பீய்ச்சி அடிக்கும், உடலை மசாஜ் செய்யும் வகையில் நவீன வசதிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆடம்பர மாளிகையில் உள்ள பொருட்களின் மேலே, அதன் மதிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது.

மாளிகையை சுற்றிக்காட்டிய டில்லி அமைச்சரும், கடந்த சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரவாலை தோற்கடித்தவருமான பா.ஜ.,வைச் சேர்ந்த பர்வேஷ் வர்மா கூறுகையில், “அரசு வாகனத்தையும், அரசு பங்களாவையும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறிய கெஜ்ரிவால், இந்த பங்களாவுக்காக 56 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் மக்கள் உயிரிழந்த கொண்டிருந்த காலக்கட்டத்தில் இந்த பங்களா புதுப்பிக்கப்பட்டது,” என்றார்.

மாளிகையில், கிழிந்த இருக்கையுடன் இருந்த நாற்காலி வைக்கப்பட்டிருந்த அறையைக் காட்டிய பர்வேஷ் வர்மா, “இந்த அறையில் இருந்து தான் சமூக வலைதளங்களில் நேரடியாக கெஜ்ரிவால் உரையாற்றினார். இதன் மூலம், எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததாக அவர் காட்டிக்கொண்டார்,” என, விமர்சித்தார். இந்த பங்களாவை, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க திட்டமிட்டுள்ள மாநில பா.ஜ., அரசு, நுழைவுக் கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்க முடிவு செய்துள்ளது.

டில்லி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையின்படி, கெஜ்ரிவாலின் அரசு பங்களா புதுப்பிக்கும் பணி 33.66 கோடி ரூபாயில் நிறைவடைந்துள்ளது. இது முதலில் மதிப்பிடப்பட்ட தொகையை விட 342 சதவீதம் அதிகம். இதில், உயர்தர வசதிகள், கலைநயம் மிக்க பொருட்கள், பழங்காலப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களுக்காக மட்டும் 18.88 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.மேலும், பங்களாவில் கூடுதல் தங்குமிடங்கள் அமைத்தது, முகாம் அலுவலகம் மற்றும் பணியாளர் கட்டடத்தில் மாற்றங்கள் செய்தது உள்ளிட்டவற்றிலும் பொதுப்பணித்துறை முறைகேடுகள் செய்ததாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.