Tamil Nadu Budget 2026: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7000 கோடி கடன்
மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் இளம்பெண்களுக்குப் பொருளாதார உதவி வழங்க தமிழக அரசு ரூ.7,000 கோடி கடன் வழங்கும் புதிய திட்டத்தை திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் தமிழக அரசின் பட்ஜெட்டில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வு கூட்டம் தினமும் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம்தேதி காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட உள்ளது. அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181 - 1ன் கீழ், 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனச் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் எனத் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக தவெக ஆட்சியைப் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தவெக ஆட்சி அமைந்த நாளிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும் தேர்தல் வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனது முதல் முக்கிய கோப்புகளில் ஒன்றான ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ (Drug Free Tamil Nadu) திட்டத்திற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துக்களை முடக்கி, பறிமுதல் செய்ய புதிய போலீஸ் பிரிவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு 500 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
அதற்குபிறகு, பெண் குழந்தைகள் மற்றும் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ உருவாக்கப்பட்டு அதன் சேவைகளும் தொடங்கி வைக்கப்பட்டன. இது நேரடியாக முதலமைச்சரின் கண்காணிப்பின் கீழ் இயங்குகிறது. முதற்கட்டமாக இவற்றுக்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 2,500-க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனை தவிர அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாய்மாமன் பரிசாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் மகத்தான திட்டமும் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் வரும் செப்டம்பர் 15-ம்தேதி அன்று தொடங்கப்பட உள்ளது.
இப்படி விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான் வரும் ஆகஸ்ட் 5-ம்தேதி தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களுக்கு பயன்தரக்கூடிய பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை 100 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்படுமா, வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுமா என்பது போன்ற பலத்த எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதில் நிலுவையில் உள்ள திட்டங்கள், புதிய அறிவிப்புகள் மற்றும் நிதி இருப்பு குறித்து ஆழமான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கூட்டுறவுத் துறை தொடர்பான முக்கிய ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சுயஉதவிக் குழுக்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரு மிகப்பெரிய அறிவிப்புத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் இளம்பெண்களுக்குப் பொருளாதார உதவி வழங்க தமிழக அரசு ரூ.7,000 கோடி கடன் வழங்கும் புதிய திட்டத்தை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, "சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்" என்ற புதிய பெயரில், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளம் பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் புதிய தொழில்களைத் தொடங்கி வெற்றிபெற ஏதுவாக தொழில் முனைவோர் கடன்களை வழங்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக நடப்பு நிதியாண்டில் மட்டும் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி கடன் நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் ஏற்கனவே பயிர்க்கடன், நகைக்கடன், சிறு வணிகக் கடன் போன்றவை வழங்கப்பட்டு வரும் நிலையில், இப்போது இந்த ‘சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ மூலம் நலிவடைந்த பெண்களை தொழில் முனைவோராக மாற்றி, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ‘சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.