'நான் விக்கெட் டேக்கர் என கேப்டன் இஷான் கிஷனுக்கு தெரியாது'.. வைபவ் சூர்யவன்ஷி கலகல பேச்சு
'நான் விக்கெட் டேக்கர் என கேப்டன் இஷான் கிஷனுக்கு தெரியாது'.. வைபவ் சூர்யவன்ஷி கலகல பேச்சு
பெங்களூர்: 2026 துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் கிழக்கு மண்டல அணியின் இளம் ஆல்-ரவுண்டர் வைபவ் சூர்யவன்ஷி பந்துவீச்சில் அசத்தியுள்ளார். வடகிழக்கு மண்டல அணிக்கு எதிரான ஆட்டத்தில், கேப்டன் இஷான் கிஷன் தமக்கு பந்துவீச வாய்ப்பளித்த போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தப் போட்டியில் கிழக்கு மண்டலம் இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த வைபவ், பந்துவீச்சில் அசத்தினார். வடகிழக்கு மண்டலத்தின் 2வது இன்னிங்ஸில் 3 ஓவர்கள் மட்டுமே வீசி 11 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். வைபவ் தனது சுழலில் முதலில் கிஷான் லிங்டோவையும், அடுத்த சில பந்துகளில் இம்லிவாதி லெம்துரையும் ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார்.
இது குறித்து வைபவ் சூர்யவன்ஷி பேசுகையில், "எதிரணி விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடிக் கொண்டிருந்த போது எனக்கு 2-3 ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பந்துவீச கொடுத்ததை கேப்டன் இஷான் கிஷன் ஒரு பெரிய ரிஸ்க் என நினைத்தார். ஆனால், நான் ஒரு விக்கெட் டேக்கர் என்பது அவருக்குத் தெரியாது. மேலும் நான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் எனக்கு 3 ஓவர்கள் மட்டுமே கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியும். அதனால் சரியான இடத்தில் பந்தை வீச முயன்றேன். பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், பந்துவீச்சில் விக்கெட் எடுத்து அணிக்கு பங்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
வைபவ்வின் இந்த சிறப்பான சுழற்பந்து வீச்சால் வடகிழக்கு மண்டலம் 75 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்து 79 ரன்களுக்கு 7 விக்கெட் என சரிந்தது. கிழக்கு மண்டலம் முதலில் பேட்டிங் செய்து 467 ரன்கள் குவித்திருந்தது. வடகிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கிழக்கு மண்டல அணி அடுத்து ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் மத்திய மண்டல அணியை எதிர்கொள்ள உள்ளது.