வைபவ், அபிஷேக் எல்லாம் வீட்டுக்கு கிளம்புங்க.. செமி பைனலில் இந்தியா ஏ அணியை வீழ்த்திய இலங்கை
வைபவ், அபிஷேக் எல்லாம் வீட்டுக்கு கிளம்புங்க.. செமி பைனலில் இந்தியா ஏ அணியை வீழ்த்திய இலங்கை
தோகா: 2026 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா ஏ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 318 ரன்கள் என்ற கடின இலக்கை எதிர்கொண்ட இலங்கை அணி எந்த அழுத்தமும் இன்றி வேகமாக ரன் குவித்தது. 51 பந்துகள் மீதமிருந்தபோதே இலக்கை எளிதாக எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்ஷித் ராணா என நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்தியா ஏ அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 63 பந்துகளில் 78 ரன்களும், கேப்டன் திலக் வர்மா 53 ரன்களும், பின்வரிசையில் ஷாபாஸ் அகமது 54 ரன்களும் விளாசினர். முந்தைய ஆட்டத்தில் 204 ரன்கள் அடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் 318 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள், இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடக்க வீரர் சினேத் ஜெயவர்தனே தான் சந்தித்த முதல் பந்திலேயே 0 ரன்னில் கொடுத்த கேட்ச்சை தனுஷ் கோட்டியான் தவறவிட்டது இந்தியாவுக்கு பெரும் வினையாக அமைந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திய சினேத் வெறும் 70 பந்துகளில் 105 ரன்களும், லசித் குரூஸ்புல்லே 107 பந்துகளில் 116 ரன்களும் விளாசி சதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து இந்திய பந்துவீச்சை நிலைகுலையச் செய்தது.
பின்னர் நிஷான் மதுஷ்கா 58 ரன்களுடனும், கேப்டன் பவன் ரதநாயகே 31 ரன்களுடனும் களத்தில் நின்று, 41.3 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்து இலங்கையை வெற்றி பெற வைத்தனர். இந்திய அணியில் ஹர்ஷித் ராணா மற்றும் ஷாபாஸ் தலா 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினர். அர்ஷத் கான், தனுஷ் கோட்டியான் ரன்களை வாரி வழங்கினர்.
அர்ஷத் கான் 4 ஓவர்களில் 46 ரன்கள், ஹர்ஷித் ராணா 7 ஓவர்களில் 61, சூர்யான்ஷ் ஷெட்கே 2 ஓவர்களில் 23 என ரன்களை வாரி வழங்கினர். ஹர்ஷ் துபே 10 ஓவர்களில் 56, ஷாபாஸ் அஹமது 10 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்தனர். பேட்டிங்கில் 317 ரன்கள் சேர்த்த போதும், பந்துவீச்சாளர்களின் படுமோசமான ஆட்டத்தால் இந்தியா ஏ அணி பரிதாபமாக வெளியேறியது.