வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால், தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இதுவரையில் பற்றாக்குறையாகவே உள்ளது. அக்டோபர் மாதத்தில் 17 செ.மீ., நவம்பர் மாதத்தில் 18 செ.மீ. சராசரியாக இக்காலகட்டத்தில் மழை பொழிவு இருக்க வேண்டும். ஆனால் நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.
டிசம்பர் மாதத்தில் 9 செ.மீ. மழை சராசரியாக பெய்ய வேண்டும். இதுவரையில் பற்றாக்குறை அளவில் பருவமழை இருந்து வருகிறது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதுபற்றிய அறிவிப்பு நாளை (வியாழக்கிழமை) வெளியாகும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். அது தாழ்வு மண்டலமாக அடுத்தடுத்து வலுப்பெறுமா, புயலாக மாறுமா என்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சுமார் 0.9 கி மீ உயரத்தில் குமரிக்கடல் பகுதியிலிருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயலசீமா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. சுமார் 0.9 கி மீ உயரத்தில் தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.