📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 20, 2026 07:03 PM

யுஓபி வங்கிக்கு எதிரான முதியவரின் வழக்கு தள்ளுபடி

யுஓபி வங்கிக்கு எதிரான முதியவரின் வழக்கு தள்ளுபடி

யூஓபி வங்கிக்கு எதிராக மூதாட்டி ஒருவர் தொடுத்த $500,000 இழப்பீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விசாரணையின்போது தமக்குச் சாதகமற்ற முக்கிய ஆதாரங்களை அவர் திட்டமிட்டு மறைத்ததை நீதிமன்றம் சுட்டியது.

மூதாட்டியின் இந்த நடவடிக்கை நீதிமன்ற நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தும் செயலாகும் என்று உதவிப் பதிவாளர் ராமு மெய்யப்பன் தெரிவித்தார். மூதாட்டி காவல்துறையிடம் அளித்த புகாரில் தெரிவித்த தகவல்களுக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்துக்கும் இடையே பேரளவில் முரண்பாடுகள் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

லாவ் லோக் சிம் (லியூ யுச்சான் என்றும் அழைக்கப்படுபவர்) எனும் அந்த மூதாட்டி, 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதியன்று பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள யூஓபி வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கி, அன்றைய தினமே இணைய வங்கிச் சேவைக்கும் விண்ணப்பித்தார்.

பின்னர் ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று, குறுஞ்செய்தி வழியாக வந்த ஒருமுறை பயன்படுத்தும் மறைச்சொல், அட்டை எண் மற்றும் கணக்குக் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி தமது கைப்பேசியில் மின்னிலக்க அடையாளச் சான்றை அமைத்தார்.

அதன்பின் ஜூன் மாதம் 17ஆம் தேதிக்கும் 20ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், தலா மூன்று முறை அந்த வங்கிக் கணக்கில் அவர் பணம் செலுத்தினார். ஒவ்வொரு முறையும் அவர் $200,000 செலுத்தினார்

அதே காலகட்டத்தில், கைப்பேசிச் செயலி வழியாக அவரது மின்னிலக்க அடையாளச் சான்றைப் பயன்படுத்தி 10 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் $500,000 பணம் அவரது கணக்கிலிருந்து மாற்றப்பட்டது.

ஒவ்வொரு பரிவர்த்தனைக்குப் பிறகும் வங்கி சார்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி எச்சரிக்கைகளைப் பெற்றபோதிலும், அவர் வங்கியுடன் தொடர்புகொள்ளவில்லை. ஜூன் மாதம் 20ஆம் தேதியன்று வங்கியின் சார்பில் அவரைத் தொடர்புகொள்ள முயன்றும் இயலாததால், வங்கி அவரது கணக்கை முடக்கியது.

தமது கைப்பேசிச் செயலி வழியாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், வங்கி எச்சரிக்கையுடன் இருந்து இத்தகைய பணப்பரிமாற்றங்களை அனுமதித்திருக்கக்கூடாது என்று வாதிட்டு திருவாட்டி லாவ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஆனால், தாம் ஒரு மோசடியில் பாதிக்கப்பட்டவர் என்பதை அவர் தமது வாக்குமூலத்தில் குறிப்பிடவில்லை.

வழக்கின்போது காவல்துறை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், திருவாட்டி லாவ் சில பகுதிகளை மறைத்துத் தொகுக்கப்பட்ட அறிக்கையையே முதலில் சமர்ப்பித்தார். பின்னர் முழுமையான அறிக்கை பெறப்பட்டபோது, உண்மை விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

உதவிப் பதிவாளர் ராமு மெய்யப்பன், திருவாட்டி லாவ்வின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, யூஓபி வங்கிக்கு வழக்குச் செலவாக $12,500 தொகையை வழங்குமாறும் உத்தரவிட்டார். திருவாட்டி லாவ் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.