📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 10:03 AM

எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டில் துளி கூட உண்மையில்லை

எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டில் துளி கூட உண்மையில்லை

எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டில் துளி கூட உண்மையில்லை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

எஸ்.பி.வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோர் திருமாவளவன் முதலமைச்சராவதற்கு நாங்கள் திமுகவோடு பேசிவிட்டோம் என்று கூறியதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Published : August 10, 2026 at 9:42 AM IST

திருவண்ணாமலை: எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் சொல்லக்கூடிய குற்றச்சாட்டில் ஒரு துளி கூட உண்மையில்லை என அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகிய இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக திருவண்ணாமலை, போளூர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக கொறடாவும், சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில், “கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவோடு கூட்டணி தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என்று தெரிவித்தனர். அதனடிப்படையில் தான் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார்.

மேலும், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து பாஜகவினர் மற்றும் அப்போது மாநில தலைவராக இருந்த அண்ணாமலை உள்ளிட்டோர் தவறாக பேசியது குறித்து பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.

அதேபோல் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளடக்கிய 21 சட்டமன்ற தொகுதிகளில் எஸ்.பி.வேலுமணி பரிந்துரை செய்த வேட்பாளர்களையும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு நத்தம் விஸ்வநாதன் பரிந்துரை செய்த வேட்பாளர்களையும், விழுப்புரம் மாவட்டத்திற்கு சி.வி சண்முகம் பரிந்துரைத்த வேட்பாளர்களை மட்டுமே எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவித்தார்.

அந்தந்த மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், குறுநில மன்னர்களாக செயல்பட்டதன் காரணத்தினால் தான் அவர்களின் பரிந்துரைகளின் படி, அறிமுகப்படுத்தியவர்களை எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவித்தார். மேலும் அவர் 234 தொகுதிகளில், 196 தொகுதிகளில் நேரடியாக சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற தலைவராக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்த நிலையில், ஏன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன் வைத்தனர். மேலும், திருமாவளவன் முதலமைச்சராவதற்கு நாங்கள் திமுகவோடு பேசிவிட்டோம் என்று கூறினர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவின் குதிரை பேரம் மூலம் இழுக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ சூழ்ச்சிகளையும், சோதனைகளையும் தாண்டி இந்த இயக்கத்தை கம்பீரமான முறையில் எடப்பாடி பழனிசாமி வழிநடத்திச் செல்கிறார்.

எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பொதுவெளியில் தொடர்ந்து பேட்டி கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 400-க்கும் மேற்பட்டவர்களை நீக்கியதாக கூறுகிறார்கள், இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்களை மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் புதிய உத்வேகத்தோடு, ஆர்வத்தோடு செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஒருவரையும் நீக்கக் கூடாது என்பதற்காக அனைவரையும் அரவணைத்து செல்வதாகவும், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் சொல்லக்கூடிய குற்றச்சாட்டில் ஒரு துளி கூட உண்மையில்லை” என்று தெரிவித்தார்.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வரவுள்ளது. எப்போது இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு, “விரைவில் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதையே அவரது எண்ணம். கட்சியின் நலனுக்காக அவர் உறுதியான முடிவை எடுப்பார்” என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற இயக்கம் இருக்கிறதா என்பதே நாட்டு மக்களுக்கு தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார். 2021ஆம் ஆண்டு தேர்தலில் டிடிவி தினகரனை வேண்டாம் என்று சொன்னது எஸ்.பி வேலுமணி தான். எதிர்காலத்தில் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்.

திமுகவுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி எந்த நேரத்திலும் கூறவில்லை. எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பேசுவது அப்பட்டமான பொய். திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக, திமுக தீய சக்தி என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.