புதிய நீர்முகப்பாகும் ‘லாங் ஐலண்ட்’
சின்னஞ்சிறுத் தீவான சிங்கப்பூரில் வருங்காலத் தலைமுறையினர் வாழ, லாங் ஐலண்ட் ஒரு புதிய நீர்முகப்பாக விளங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையில் பேசிய அவர், இங்குள்ள இடப்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, அரசாங்கம் சிங்கப்பூரின் தீவுகளை எவ்வாறு பயன்படுத்தவுள்ளது என்பதைப் பற்றி விளக்கினார்.
அவற்றுள் ஒன்றாக, சிங்கப்பூரின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமையும் லாங் ஐலண்ட் திட்டத்தைப் பற்றியும் பிரதமர் பேசினார்.
அதன்கீழ், ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைக்கு அப்பால் இருக்கும் கிட்டத்தட்ட 800 ஹெக்டர் பரப்பளவிலான நிலம் மீட்கப்படும்.
ஏற்கெனவே இருக்கும் கடலோரப் பகுதிகளுடன் லாங் ஐலண்ட் இணைக்கப்படும் என்றும் திரு வோங் கூறினார்.
புதிய வீடுகள், நீர்த்தேக்கம், ஏறக்குறைய 20 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய நீர்முகப்புப் பூங்காக்கள் போன்றவை லாங் ஐலண்டில் அமைக்கப்படும்.
பருவநிலை மாற்றத்தால், அதிகரித்துவரும் கடல் நீர் மட்டம் சிங்கப்பூருக்கு அபாயத்தை விளைவிக்கலாம்.
குறிப்பாக, கடல் நீர் மட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தால், கடல்மட்டத்திலிருந்து ஐந்து மீட்டருக்குக் குறைவான உயரத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் பூங்காப் பகுதிக்குக் பாதிப்புகள் நேரக்கூடும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஆகவே, அப்பகுதியைப் பாதுகாக்கும் நோக்கில் லாங் ஐலண்ட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறு பிள்ளையாக இருக்கும்போது, மரின் பரேட் வட்டாரத்தில் வசித்த திரு வோங், 1960களிலிருந்தே நிலமீட்புக்கான பணிகள் மரின் பரேட், ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரங்களில் தொடங்கியதை நினைவுகூர்ந்தார். அந்த வட்டாரத்தில் இருந்த பெரும்பாலான நிலப்பகுதிகள் முன்பு கடற்பகுதிகளாக இருந்ததாகத் தம் பெற்றோர் அடிக்கடி தம்மிடம் கூறியதாக அவர் கூறினார்.
“என்னுடைய தாத்தா கம்போங் அம்பருக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் மீனவராகப் பணியாற்றினார்,” என்றும் திரு வோங் சொன்னார்.
முற்றிலுமாக மீட்கப்பட்ட நிலத்தின்மேல் கட்டப்பட்ட முதல் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வட்டாரமாக மரின் பரேட் விளங்குகிறது. அக்காலத்தில், மீட்கப்பட்ட நிலத்தின்மேல் எழுப்பப்படும் கட்டடங்கள் உறுதியாக நிலைத்து நிற்குமா என்ற ஐயம் சிங்கப்பூரர்கள் சிலரிடையே இருந்ததாகவும் திரு வோங் கூறினார்.
ஆனால், கடலை நோக்கிப் பார்க்கக்கூடிய அவ்வீடுகளில் வாழ்வதையே இன்றைய சிங்கப்பூரர்கள் பலர் கனவாகக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நகரத்தையும் சாங்கி விமான நிலையத்தையும் இணைக்கும் ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையும் மீட்கப்பட்ட நிலத்தின்மேல் கட்டப்பட்டது.
1991ஆம் ஆண்டின் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் ‘கான்செப்ட்’ திட்டத்தில், லாங் ஐலண்டை மீட்கப்பட்ட நிலமாக உருமாற்ற யோசனைகள் இடம்பெற்றிருந்தன.
பருவநிலை மாற்றத்தின் சீற்றம் அதிகரிக்க, 2019ஆம் ஆண்டின் தேசிய தினப் பேரணி உரையில், அப்போதைய பிரதமர் லீ சியன் லூங் கடலோரப் பாதுகாப்பையும் நில மீட்புப் பணிகளையும் ஒருங்கிணைக்கும் ஓர் இடமாக லாங் ஐலண்டைக் குறிப்பிட்டிருந்தார்.