📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 19, 2026 04:30 PM

தமிழக முதல்வர் மருத்துவக் காப்பீடு: ரூ.25 லட்சம் உயர்வு

தமிழக முதல்வர் மருத்துவக் காப்பீடு: ரூ.25 லட்சம் உயர்வு

சென்னை: தமிழகத்தில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்டார்.

தமிழக மக்களின் மருத்துவச் சுமையைக் குறைக்கும் வகையில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அப்போது காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், இலவச சிகிச்சைக்கான இந்தக் காப்பீட்டுத் தொகை, ஆண்டொன்றுக்கு ரூ.25 லட்சமாகத் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் விஜய்.

அப்போது, “ஒரு மனிதனின் உயிரையும் மருத்துவச் சேவையையும் அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. மருத்துவம் என்பது சலுகை அல்ல, அது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை,” என்று அவர் குறிப்பிட்டார்.

வடசென்னையில் ‘பன்னோக்கு மருத்துவமனை’

“ஏழை எளிய குடும்பங்களுக்கு உயர்தரச் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், மருத்துவக் காப்பீட்டுத் தொகை 5 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

“வடசென்னை மக்களின் நலனுக்காக, பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட அதிநவீன ‘பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை’ அமைக்கப்படும்,” என்றார் விஜய்.

திருநங்கைகளுக்கான மருத்துவச் சேவை

சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான அறுவைச் சிகிச்சை சேவைகள் இக்காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் விரிவுபடுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், சுகாதாரத் துறையில் தாதியர், துணை மருத்துவப் படிப்புகளுக்காக ரூ.351 கோடியில் கூடுதலாக 6,098 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.