📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 27, 2026 01:32 AM

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நவ.30

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நவ.30

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இதன்படி, நவம்பர் 30-ம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையும் கூடுகின்றன.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் என்பதால், இவற்றை நிறைவேற்ற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் போதிய ஆதரவு கிடைக்காததால் 3 மசோதாக்களும் தோல்வியடைந்தன.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலும் இந்த மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மழைக்காலக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. எனினும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் கூட்டத்தொடர் முறைப்படி நிறைவு செய்யப்படாமல் உள்ளது.

கிரண் ரிஜிஜு அறிவிப்பு

இந்தச் சூழலில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“நவம்பர் 30-ம் தேதி திங்கள்கிழமை மக்களவைக் கூட்டத்தொடரை மீண்டும் கூட்டுமாறு மக்களவைத் தலைவரிடமும், டிசம்பர் 2-ம் தேதி புதன்கிழமை மாநிலங்களவைக் கூட்டத்தொடரை நடத்துமாறு மாநிலங்கள

வைத் தலைவரிடமும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இரு அவைகளின் கூட்டத்தொடரும் டிசம்பர் 3-ம் தேதி நிறைவடைய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் 3 மசோதாக்களையும் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 3 மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மசோதாக்களை எதிர்த்து செயல்படுவது தொடர்பான வியூகங்கள் வகுக்கப்படும் எனத் தெரிகிறது.

மக்களவையில் சவால்

மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்ற அடிப்படையில் 362 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.

மேற்கு வங்கம், மேகாலயாவைச் சேர்ந்த தலா ஒரு எம்.பி. உயிரிழந்துள்ளனர். காஷ்மீரைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் மக்களவை

யில் தற்போது 540 உறுப்பினர்கள் உள்ளனர். இதன்படி, மசோதாக்களை நிறைவேற்ற 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மக்களவையில் பாஜகவுக்கு 241 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 319 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

காங்கிரஸுக்கு 98 எம்.பி.க்கள் உள்ளனர். அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து இண்டியா கூட்டணிக்கு 183 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரு கூட்டணிகளையும் தவிர்த்து திமுக (22), ஆம் ஆத்மி (3) உள்ளிட்ட கட்சிகளிடம் 38 எம்.பி.க்கள் உள்ளனர்.

தற்போதைய நிலையில், மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் கூட்டணிக்கு மேலும் 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

மாநிலங்களவையில் நிலவரம்

மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலா ஓர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், தற்போது 243 உறுப்பினர்கள் உள்ளனர். இதன்படி, அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற 162 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

மாநிலங்களவையில் பாஜகவுக்கு 116 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 151 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸுக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து இண்டியா கூட்டணிக்கு 64 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த இரு அணிகளையும் சாராத திமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடம் 28 உறுப்பினர்கள் உள்ளனர்.

தற்போதைய நிலையில், மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இரு அவைகளிலும் ஆதரவைத் திரட்ட பாஜக தலைமை நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.