📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 12:05 AM

குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து மணல் கொள்ளையை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து மணல் கொள்ளையை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

“திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன.

அதிலும், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே, பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் புகார்கள் மீது அலட்சியம் காட்டி வருவதன் பின்னணியில், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதாகவும், மணல் கொள்ளையில் சில சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனவே, கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.