📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema November 26, 2026 08:03 PM

‘ஓ.ம்’

‘ஓ.ம்’

‘ஓ.ம்’ - சினிமா விமர்சனம்

2015-ல் நடந்த ஆந்திர என்கவுன்ட்டரை பின்னணியாகக் கொண்டு, செம்மரக் கடத்தலில் சிக்கும் எளிய மக்களின் அவலத்தையும், காவல்துறை வன்முறையையும் ஓர் உளவாளியின் பார்வையில் பேச முயன்றிருப்பது கவனிக்க வைக்கிறது

செம்மரக் கடத்தல் நெட்வொர்க்குக்குள் ஓர் உளவாளி... ‘ஆபரேஷன்’ வெற்றிபெற்றதா?

செம்மரக் கடத்தலை வேரறுக்க ஆந்திர அரசு அமைக்கும் சிறப்புப் பிரிவுக்குத் தலைமை ஏற்கிறார் காவல் அதிகாரி நித்யா ரெட்டி (சாய் பல்லவி). இதற்காக அவர் தொடங்கும் ‘ஆபரேஷன் மோல்’ திட்டத்தில் இணைகிறார் ரகசியக் காவல் அதிகாரி பழனி (தனுஷ்). செம்மரக் கடத்தலில் முக்கியப் புள்ளியாக இருக்கும் ‘பர்மா’ கார்த்திகேயனின் (மம்மூட்டி) குழுவுக்குள் திருக்குமரனாக ஊடுருவி, அவரது நம்பிக்கையைப் பெறுகிறார். தன் மிஷனில் கடத்தல் நெட்வொர்க்கின் பின்னணியிலுள்ள பெரும்புள்ளிகளுக்கு எதிரான ஆதாரங்களை அவர் திரட்டினாரா, இந்த ஆபரேஷன் வெற்றிபெற்றதா என்பதே இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் ‘ஓ.ம்’.

ஆக்‌ஷன், நடனம், கலகலப்பு எனச் சிறிய இடைவெளிக்குப் பிறகு முழுநீள கமர்ஷியல் நாயகனாக தனுஷ்! உளவாளியின் இரட்டை வாழ்க்கையையும், தனிப்பட்ட இழப்புகளையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் அழுத்தமான நடிப்பைப் பதிவுசெய்கிறார். ‘பர்மா’ கார்த்திகேயன் வேடத்தில் ‘செப்பு கலந்த 916 தங்கமாக’ மம்மூட்டி கச்சிதம். ஆனால், அவரது நடிப்பாற்றலுக்குப் போதிய தீனி இல்லை. மிடுக்கான காவல் அதிகாரியாக சாய் பல்லவி தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். எமோஷனல் பக்கங்களிலும் அத்தனை நேர்த்தி! குறைந்த நேரமே வந்தாலும், கணவனின் மர்மம் புரியாத மனைவியாக ஸ்ரீலீலா குறைவைக்கவில்லை. கடத்தல் நெட்வொர்க் பெரும்புள்ளியாக நஸ்ருதீன் ஷாவின் வசன உச்சரிப்பும் டப்பிங்கும் உறுத்தல்.

தொடக்கத்தில் இடம்பெறும் நீண்ட சிங்கிள் ஷாட் காட்சியும், காட்டில் நடக்கும் இரவு நேரச் சண்டைக் காட்சிகளும் கே.எழிலரசின் சிறப்பான ஒளிப்பதிவுக்குச் சான்றுகள். படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன், நீளமான விளக்கக் காட்சிகளையும், இரண்டாம் பாதியின் தொய்வையும் இன்னும் கவனித்திருக்கலாம். சாய் அபயங்கர் இசையில் ‘அலகலோவா’, ‘வீழா வீரா’ பாடல்கள் மாஸ். பின்னணி இசை பலம் சேர்த்தாலும், இடைவிடாது ஒலிப்பதால் சில இடங்களில் இரைச்சலாகவும் மாறுகிறது.

ஆனால், என்கவுன்ட்டர் அரசியல், உளவாளியின் இரட்டை வாழ்க்கை எனப் பலவற்றைப் பேச முயன்று, தடுமாறுகிறது படம். திருக்குமரன் மீது கார்த்திகேயன் திடீரென வைக்கும் அளவு கடந்த நம்பிக்கை, இறுதியில் அவருக்கு ஏற்படும் மனமாற்றம் உள்ளிட்ட முக்கியத் திருப்பங்களுக்குத் திரைக்கதையில் போதிய நியாயங்கள் இல்லை. அதிலும் பிரதான கதை முடிந்த பிறகும் நீளும் சிறைச்சாலை கலவரக் காட்சிகள் சோர்வூட்டும் அத்தியாயம்!

அதிகார அரசியலைப் பேசும் துணிச்சல் இருந்தும், அதைத் தாங்கும் திரைக்கதை இல்லாமல் தவிக்கிறது ‘ஆபரேஷன் மோல்’!