18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடு; இன்று 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம்
-நமது நிருபர்-
மஹாராஷ்டிராவில், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகள் 10 பேர், மும்பை நகருக்குள் 2008, நவம்பர் 26ல் கடல் வழியாக நுழைந்தனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் மஹால் ஓட்டல், லியோ கபே, காமா மருத்துவமனை, யூதர்கள் சமுதாய மையம் ஆகிய இடங்களில் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் 60 மணி நேரம் சண்டை நடந்தது. இதில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே, இன்ஸ்பெக்டர் விஜய் சலாஸ்கர், உதவி எஸ்.ஐ., துக்காராம் ஓம்லே உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டான்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் 18வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மும்பை நகரின் முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதற்கு பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் போது உயிரிழந்த அப்பாவி உயிர்களை நினைவுகூர்வோம்; தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை செலுத்துவோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், அதில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். பயங்கரவாதத்தை சற்றும் சகித்து கொள்ள மாட்டோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
கொடூரமான குற்றமாகும்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில், ''2008ம் ஆண்டு இதே நாளில், மும்பையில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் தேசம் முழுவதையும் உலுக்கியது. பயங்கரவாதிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்தத் தாக்குதலில் பலியான அனைத்து அப்பாவி உயிர்களுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடூரமான குற்றமாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான பாஜ அரசின் கொள்கை உலகெங்கிலும் பாராட்டப்படுகிறது. இன்று, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியா ஒரு முன்னணிப் பங்கை வகிக்கிறது; பயங்கரவாதத்திற்கும். சதித்திட்டத்திற்கும் எதிராகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
நிலைத்திருக்கும்!
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட பதிவில், ''26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் இந்தத் துயரமான நினைவு நாளில், உயிர் இழந்த அப்பாவி மக்களின் நினைவாக நான் தலைவணங்குகிறேன். நமது வீரமிக்க ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக அச்சமின்றி நின்ற அனைவரின் துணிச்சலையும் போற்றுகிறேன். அவர்களின் தியாகமும் தன்னலமற்ற சேவையும் நம் தேசத்தின் ஆன்மாவில் என்றென்றும் நிலைத்திருக்கும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், அமைதியான, மனிதாபிமானம் மிக்க உலகத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியளிக்கிறோம்'' எ குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ''இன்று, 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன். நமது தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களையும் நினைவுகூர்கிறேன். பயங்கரவாதத்தை எதிர்த்து உறுதியாக நின்ற நமது போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் துணிச்சல், வீரம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் துணிச்சல், கடமை, தியாகம் மற்றும் தேசத்திற்கான சேவை ஆகிய உன்னத மரபுகளைப் பிரதிபலிக்கிறது.
அவர்களின் உன்னத தியாகம் என்றும் நிலைத்திருக்கும் ஓர் உத்வேகமாகத் திகழ்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தனது உறுதிப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது '' என குறிப்பிட்டுள்ளார்.