மெட்ரோ ரயில் தரத்துக்கு உயரும் பறக்கும் ரயில்
சென்னை: கடந்த பல ஆண்டுகளாகச் சென்னையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் வழித்தடம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெரும் மாற்றங்களை எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக, பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைக்கான ஒப்புதலை ரயில்வே அமைச்சு வழங்கியுள்ளது என்றும் தெற்கு ரயில்வேக்கும் தமிழக அரசுக்கும் இடையே அதிகாரபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
90 நாள்களில் ஒப்படைப்பு
ஏறக்குறைய 24 கிலோ மீட்டர் நீளம் உள்ளது சென்னை பறக்கும் ரயில் வழித்தடம். இதை மெட்ரோ ரயில் சேவைக்கு இணையாகத் தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தின்படி, தெற்கு ரயில்வே தனது கட்டுப்பாட்டில் உள்ள முக்கியச் சொத்துகள், பராமரிப்புப் பணிகள், பொதுச் செயல்பாடுகளை அடுத்த 90 நாள்களுக்குள் மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகள் ‘மாறுதல் காலமாக’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ரயில் இயக்கம் தெற்கு ரயில்வே வசமே இருக்கும் என்றாலும், மெட்ரோ ரயில் நிர்வாகம் உயர்தர வசதிகளை அமைக்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்.
இரண்டு ஆண்டுகாலம் நிறைவடையும்போது, முழுமையான ரயில் இயக்க நிர்வாகம் சென்னை மெட்ரோவிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும். இதன் மூலம், சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயில்களுக்கு நிகரான பொலிவுடனும் கூடுதல் வசதிகளுடனும் பயணிகளுக்குக் கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.