வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஆக.26 வரை மிதமான மழை வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆக.26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஆக.21) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
22, 23 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
24, 25 தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 26-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் ஆக.24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கொக்காரத்தாங்கலில் 8 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தலா 6 செமீ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திருச்சி மாவட்டம் நந்தியாறு, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, பெரம்பலூர் மாவட்டம் பாடலூர், ஈரோட மாவட்டம் சென்னிமலை ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.